சாம்பல் நாரை (Grey Heron, Ardea cinerea) நீருக்கு அருகாமையில் வாழும் பறவையினம். இது ஒரு பெரிய பறவையினம். மிகவும் உயரமாகவும் ஒல்லியாகவும் நீண்ட வளைந்த கழுத்துடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும்.
நதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[2]பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு[3]
இவை 100 செண்டிமீட்டர் உயரம் வரை வளர்ந்து 84-102 செ.மீ. நீளமும், 155-195 செமீ அகல இறக்கைகளையும் கொண்டிருக்கும்.[4] உடலெடை சராசரியாக 1.02-2.08 கிலோகிராம்கள் இருக்கும்.[5]
இதன் உடலில் பெரும்பாலும் பழுப்பு (சாம்பல்) நிறமே காணப்பெற்றாலும், சற்றே கருத்த வெள்ளை நிறம் உடலின் அடிப்பகுதியில் தென்படும். வளர்ந்த பறவைகள் வெள்ளைத் தலையையும் மெல்லிய கொண்டையையும் கொண்டிருக்கின்றன. சிறு பறவைகளோ தலையிலும் பழுப்பைக்கொண்டிருக்கும். கழுத்தின் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகள் தொண்டை முதல் தோள்பட்டை வரை செல்லும். இவைகட்கு மிகவும் வலிமை வாய்ந்த மஞ்சள் நிற அலகிருக்க அதில் சிறிது இளஞ்சிவப்பு கலந்து காணப்படும். இவை செந்நாரைகளைவிட சற்றே பெரிய உருவம் கொண்டவை.
இவை ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த நாரை குடும்பத்தின் உறுப்பினர் இதமான வெப்பம் கொண்ட தெற்கு மற்றும் மேற்கிலும் தங்கும், பனிக்காலங்களை முழுமையாக தவிர்க்கின்றன. ஆர்க்டிக் வட்டம் மற்றும் நார்வேவின் கரைகளிலும் வேனிற்காலத்தில் தங்குகின்றன.
இவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக மிகவும் அமைதியான இவ்வினம் காக்கை கரைவதைப்போல் "ஃப்ராஆஆங்க்" என்ற ஒலியினை எழுப்பும்.
நெதர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இவை பல மாமாங்கங்களாக நகரப்பறவைகளாகவே மாறிவிட்டன எனலாம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இவற்றை எப்போதும் காண இயலும். இவை நவீன நகர வாழ்விற்கேற்றார்போல் தன் தன்மைகளை மாற்றியமைத்துள்ளன. இவை எப்போதும் போல் வேட்டையாடினாலும், மீன் விற்கும் அங்காடிகள் மற்றும் சிற்றுண்டி விற்கும் அங்காடிகள் அருகே காண முடிகிறது. இவை விலங்கியல் பூங்காக்களிலும் பெங்குயின்கள், கூழைக்கடா, கடல்நாய் போன்ற மீனுண்ணும் இனங்களுக்கு உணவளிக்கும் வேளைகளில் வருவதையும் கண்டுள்ளனர். பல பறவைகள் மீனவர்களிடமிருந்து உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. அயர்லாந்து நாட்டிலும் இவ்வகை குணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[6]
நான்கு துணை இனங்கள் சாம்பல் நாரைக்கு உண்டு:
பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளை பிடித்து உட்கொள்ளும். [7] இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேவும் விழுங்கும். தேவைபட்டால் இவை மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன.
இவை கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் கூடுகட்டுகின்றதை வேடந்தாங்கல் போன்ற பறவை சரணாலயங்களில் காண இயல்கிறது. இவை பெரும்பாலும் நதி, குளம், மற்றும் கடற்கறைகளிலும் கூட்டினை அமைக்கின்றன. எனினும் இவை கோரைப்புற்கள் மீதும் கூட்டினை அமைக்கும் தன்மையுண்டு.
ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மீன் விற்கும் அங்காடித்தெருவில் சாம்பல் நாரைகள் காத்திருக்கின்றன.
சாம்பல் நாரை (Grey Heron, Ardea cinerea) நீருக்கு அருகாமையில் வாழும் பறவையினம். இது ஒரு பெரிய பறவையினம். மிகவும் உயரமாகவும் ஒல்லியாகவும் நீண்ட வளைந்த கழுத்துடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும்.
நதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு