தட்டைப் புழுக்கள் (Flat worms) முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையாக்கப்பட்ட உடலைக் கொண்ட கணம் (Phylum) Platyhelminthes ஐச் சேர்ந்த புழு உடலமைப்பை உடைய விலங்குகளாகும். இவற்றில் சுயாதீன வாழிகளும், ஒட்டுண்ணிகளும் உண்டு. Planaria உதாரண அங்கியாகக் கற்கப்படும் ஒரு சுயாதீன வாழி அங்கத்தவராகும். ஈரற் தட்டையன், நாடாப் புழு என்பன மனிதனைத் தொற்றுகின்ற முக்கிய ஒட்டுண்ணிகளாகும். இவற்றில் சுவாசத் தொகுதியோ, சுற்றோட்டத் தொகுதியோ இல்லாததால் உடல் மேற்பரப்பினூடான வாயுப் பரவல் வீதத்தை அதிகரிக்க அதிக மேற்பரப்புக்கேற்றவாறாகத் தட்டையான உடலைக் கொண்டுள்ளன. இவற்றில் பிரதானமாக 4 வகுப்புக்கள் உள்ளன. அவை டர்பெல்லேரியா(Turbelleria), ட்ரேமடோடா(Trematoda), செஸ்டோடா(Cestoda), மோனோஜீனியா(Monogenea) , என்பவையாகும். இவற்றில் டர்பலேரியாவைத் தவிர ஏனைய மூன்று வகுப்புக்களைச் சார்ந்த அங்கிகள் அனைத்தும் ஒட்டுண்ணிகளாகும். இவற்றின் உடலமைப்பு ஏனைய முப்படை விலங்குகளைக் காட்டிலும் எளியதாகக் காணப்பட்டாலும், இவை ஒப்பீட்டளவில் அண்மையில் கூர்ப்படைந்த விலங்குக் கணமாகும். சுயாதீன வாழிகள் நன்னீரிலும், ஈரப்பதனான மண்ணிலும் வாழ்கின்றன. சுயாதீன வாழிகள் பொதுவாக ஊனுண்ணிகளாக உள்ளன. உதாரணமான Bipalium எனும் டர்பலேரியா வகுப்பைச் சார்ந்த தட்டைப் புழு மண் புழுவைப் பிடித்து உண்ணக்கூடியதாகும்.
மரபியல் பாகுபாட்டின் படி தட்டைப்புழுக்கள் டர்பலேரியா (Turbelleria), டிரெமட்டோடா (Tremetoda), செஸ்டோடா (Cestoda), மொனோஜீனியா (Monogenea) என நான்கு வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி டர்பலேரியாக்களின் பாகுபாடு செயற்கையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் Tremetoda, Cestoda, Monogenea என்ற மூன்று வகுப்புக்களும் மிக நெருங்கிய கூர்ப்புத் தொடர்பைக் கொண்டிருப்பதால் அவற்றை ஒரே வகுப்பெனப் பாகுபடுத்த முடியுமெனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இங்கு அனேகமான நூல்களில் பயன்படுத்தப்படும் மரபியல் பாகுபாட்டு முறையே இங்கும் விபரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் அனேகமானவை ஊனுண்ணிகளாகவோ அல்லது பிணந்தின்னிகளாகவோ உள்ளன. 4500 இனங்கள் வரை அறியப்பட்டுள்ளன. இவற்றின் நீளம் 1-600 mm வரை காணப்படலாம். டர்பலேரியாக்களில் புறத்தோல் இருப்பதில்லை. உடலின் கீழ்ப்புறத்தில் பிசிர்கள் பல காணப்படும். பிசிர்கள் மற்றும் தசைகளின் உதவியால் இடம்பெயரும். இவற்றின் வயிற்றுப் புறத்தில் வெளித்தள்ளப்படக் கூடிய தொண்டை காணப்படும். இத்தொண்டையின் உறிஞ்சல் மூலம் உணவு உள்ளடெக்கப்படும். உறிஞ்சப்பட்ட உணவு முழுமையற்ற, கிளைகொண்ட உணவுக் கால்வாய்க்குள் கடத்தப்படும். இவற்றின் தலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்புள்ளிகள் (eyespots) உள்ளன. சிலவற்றில் சிலைச்சிறைப்பைகளும் (statocyst) உள்ளன. டர்பலேரியாக்கள் ஈரிலிங்கமானவை. அவற்றில் அகக்கருக்கட்டலே நடைபெறும். அத்துடன் அனேகமானவை நேரடி விருத்தியைக் காண்பிக்கின்றன. அதாவது அவற்றின் வாழ்க்கை வட்டத்தில் குடம்பிப் பருவங்கள் இருப்பதில்லை. டர்பலேரியாக்கள் இலிங்கமில் முறைகளிலும் இனம்பெருகுகின்றன. உதாரணமாக Planaria (பிளனேரியா) புழு இரண்டாக வெட்டப்படின் ஒவ்வொரு துண்டும் இரு அங்கிகளாகப் புத்துயிர்க்கும் (regeneration) ஆற்றலைக் கொண்டுள்ளன.
இவ்வகுப்பைச் சார்ந்த இனங்கள் அனைத்தும் ஒட்டுண்ணிகளாகும். இவற்றில் வாய்ப்புற மற்றும் வயிற்றுப்புற உறிஞ்சிகளும் காணப்படும். இவை அக மற்றும் புற ஒட்டுண்ணிகளாக உள்ளன. இவற்றில் மனிதனைத் தாக்கக்கூடிய ஈரற் தட்டையன் (Fasciola hepatica) புழுவும் அடங்கும். [2]இது ஈரலில் வளர்ந்து ஈரல் அழற்சியை உண்டாக்கக்கூடியது. இவற்றின் நிறையுடலி உடலில் விருந்தி வழங்கியின் இழையத்துடன் ஒட்டிக்கொள்வதற்காகத் தோலில் முட்கள் உள்ளன. டிரெமெட்டோடாக்களின் உணவுக் கால்வாய் ஒடுக்கப்பட்டது. நிறையுடலியில் கட்புள்ளிகள் இருப்பதில்லை. தலையாக்கம் தெளிவற்றது. இவை சிக்கலான வாழ்க்கை வட்டத்தைக் காட்டுகின்றன. மிராசிடியம், ரீடியா, செர்க்கேரியா போன்ற குடம்பிப் பருவங்களூடாக மனிதனிலிருந்து நத்தைக்கும், நத்தையிலிருந்து மீன்களுக்கும், மீன்களூடாக மனிதனுக்கும் தொற்றக்கூடியது. நிறையுடலிகளின் நீளம் 0.2-6 mm வரை காணப்படலாம். நிறையுடலியாக வாழும் போது 10000 தொடக்கம் 100000 வரையான முட்டைகளை உருவாக்கக் கூடியது.
இவற்றின் நீளமான தட்டையான உடலமைப்பு காரணமாக இவை பொதுவாக நாடாப் புழுக்கள் என அழைக்கப்படுகின்றன. தலையாக்கம் தெளிவற்றது. தலைக்குப் பதிலாக கீடகச் சென்னி (scolex) எனும் உணவூட்டல் கட்டமைப்பு காணப்படும். கீடகச் சென்னியில் உணவூட்டலுக்காகவும், விருந்தி வழங்கியின் இழையத்தினோடு ஒட்டிக்கொள்வதற்காகவும் உறிஞ்சிகளும், கொழுக்கிகளும் காணப்படும். இவற்றில் உணவுக்கால்வாய் இருப்பதில்லை. போசணைப் பொருட்கள் உறிஞ்சியின் கீழுள்ள தோலினூடாக உறிஞ்சப்படுகின்றன. கீடகச் சென்னின்யின் கீழுள்ள கழுத்துப் பாகத்திலிருந்து விருத்தியுடன் மூட்டுத் துண்டங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுகின்றன. எனினும் இவை ஒரே வயதைக் கொண்டிராமையால் இவை உண்மையான அனுபாத்துத் துண்டங்கள் அல்ல. நாடாப் புழுக்களின் நீளம் பொதுவாக நன்கு வளர்ச்சியடைந்தவற்றில் 4 மீற்றர்களாக இருந்தாலும், சிலவற்றில் 20 மீற்றர்களை எட்டலாம். ஒரு விருத்தியுடன் மூட்டுத் துண்டத்தில் (proglottid) ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத் தொகுதிகள் உண்டு. கருக்கட்டலின் பின்னர் முட்டைகள் முதிர்ச்சியடைந்து முடியும் போது விருத்தியுடன் மூட்டுத் துண்டம் உடலிலிருந்து விடுபட்டு மலத்துடன் வெளியேற்றப்படும். இம்முட்டைகளிலிருந்து குடம்பிகள் வெளியேறும். பின்னர் மாடு, பன்றி போன்ற இடை நிலை விருந்து வழங்கிகளினூடாக மீண்டும் மனிதனைத் தொற்றும். சீரான மலசலகூட வசதிகளைப் பேணுவதாலும், நன்றாக அவிக்கப்பட்ட இறைச்சியையே உண்பதாலும் இத்தொற்றைத் தவிர்க்கலாம். இப்புழுக்களில் நிறையுடலி நிலையில் புலனங்கங்கள் இருப்பதில்லை.