தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.
தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் இந்தக் கூடுகள் அமைக்கப்படுகின்றன.
தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்குக் கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது. இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.
வரலாற்றில் தொல்லுயிர் எச்சங்களில் தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகத் தெரிகின்றது. இத்தொல்லுயிர் எச்சங்கள் ஐரோப்பாவில் கிடைத்திருந்தாலும், தேனீக்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மாந்தர்கள் கி.மு 4000 ஆண்டுகளிலேயே தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்தார்கள் என்றும் [1] கி.மு.1500-2000 [2][3] என்றும் பல்வேறு கணிப்புகள் உள்ளன
தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை (பூந்துகள்) சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு கடத்துவதால், பூக்களிடையே சூலுற (கருவுற) உதவுகின்றது. இதனால் சில மரஞ்செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கும் இருக்கிறது. இதனை பூந்துகள் சேர்க்கை (மகரந்தச்சேர்க்கை) என்பர்.
உலகில் தேனீக்களால் நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) [4], கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் [5]
தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளை குமுகப் பூச்சியினம் என்பர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவைதவிர பணிசெய்ய பெண் தேனீக்கள் 50,000-60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.
இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்து கிட்டத்தட்ட ஒரு கிழமையில் வெளியே பறந்து சூழலை அறிமுகப்படுத்திக் கொள்ளும். இது அறிமுகப் பறப்பு (Orientation flight) எனப்படும். அதன்பிறகு விரைவில் கலவிப்பறப்பை (nuptial flight or mating flight) மேற்கொள்ளும். கலவிப் பறப்பின்போது ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. தரை மட்டத்திலிருந்து, 65-100 அடி உயரத்தில் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது[6]. இயக்குநர் Markus Imhoof என்பவரால் தயாரிக்கப்பட்ட More Than Honey எனப்படும் விவரணப்படத்தில் இந்த கலவிப்பறப்பு மிகவும் அருகில் தெளிவாகக் காட்டுகின்றது[7] இராணித்தேனியின் அடையாளம்:
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.
இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகின்றது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.
இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. புதிய இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகள் வைக்கப்பட்டு, விரைவில் பொரித்து வெளிவர ஆவன செய்யப்படுகின்றது.
ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.
இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன.
தேனீக்களின் நடனம்:
தேனீக்களின் கூடு கட்டும் நிலைகள், கூட்டினை இடம்பெயர்த்தல் என்பது எறும்பினை ஒத்தது. எறும்புகள் வேதியியல் முகர்ச்சி மூலம் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. மாறாக தேனீக்கள் நடனம் மூலம் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கின்றன.
இடம்பெயர முதலில் ஒரு இடத்தை வேவுபார்க்கும் வேலைக்காரத்தேனீ உகந்த இடத்தை நடந்து அளக்கிறது. அதற்கு முன் பலவித இடங்களை தேர்ந்தெடுக்கிறது. பிறகே அதனை அளக்கிறது. அத்தகவல்களை, பிற வேலைக்காரத்தேனிக்களின் குழுவிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது. அவை பறந்து சென்று, புதிய இடத்தைக் கண்டுணரந்து, கூட்டிலுள்ள பிற தேனிக்களிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது.
இறுதியாக கூட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கானத்தேனிக்கள் ஒருசில நிமிடங்களில் புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து விடுகிறது. இத்தகைய துல்லியமான இடம் பெயர்ப்பு நிகழ்வு நடனம் மூலமே நிகழ்கிறது.
புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே இந்த ஆண் தேனீக்களின் செயலாகும். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.
இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்க்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. இதன் காரணத்தாலேயே இவை 'சோம்பேறிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, குடம்பிகள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது.
இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடைபெறுகின்றது.
கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதனுடைய விசப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விசப் பையின் வாய் சிதைந்து விசம் எதிரியின் உடலில் பரவி, உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன.
2007 ஆம் ஆண்டில் செய்த ஆய்வின்[8] பயனாக எதனால் ஒரு தேனீயானது பெரிதும் மாறுபட்ட ஓர் அரசித் தேனீயாக மாறுகின்றது என்று கண்டு அறிந்துள்ளனர். புழுநிலையில் (larva, லார்வா) உள்ள தேனீக்கள் உணவு உட்கொள்ளும்பொழுது ராப்பாமிசின் அடைவி (Target of Rapamycin, TOR) என்னும் ஒரு நொதியத்தால் உருமாற்றம் பெற்று ஒரு தேனீ அரசித் தேனீயாக வளர்ச்சி பெறுகின்றது என்று அறிந்துள்ளனர். இந்த ராப்பாமைசின் அடைவி (TOR) என்னும் நொதியமானது உணவில் உள்ள ஊட்டச்சத்தை உணர்ந்து உடல்வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த ராப்பாமைசின் அடைவி நொதியமானது அரசித் தேனீயில் அதிகம் இருப்பதையும், அந்த நொதியத்தைத் தடுத்துவிட்டால் புழுநிலையில் உள்ள தேனீ வெறும் பணித்தேனீயாக மட்டுமே வளர்ச்சி கொள்வதையும் கண்டு பிடித்துள்ளனர்.
தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும்.
இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்த்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக, பார்க்க இரசனை அளிக்கக் கூடிய முறையிலே தேனீக்கள் கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும். இராணித் தேனீயின் குடம்பி அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாகவுமிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேன் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறைச்சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது.
ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.
முட்டை இடுவது ஒன்றே அரசித்தேனீயின் முக்கியமான பண்பாகும். அரசித்தேனீயானது மெழுகால் அறைகள் கட்டுவது தேனை சேகரிப்பது போன்ற பணிகளை செய்யாது. அரசித் தேனீ இல்லையென்றால் மற்ற பணிசெய் தேனீகள் மிகவும் குழம்பிப்போய், தமது கட்டுக்கோப்பான சேர்ந்து வாழும் பண்பை இழக்கின்றன. அரசித் தேனீயானது, பணி செய்யாவிட்டாலும், எல்லாத் தேனீக்களையும் ஈர்த்து ஓர் ஒழுங்கில் இருக்க உதவுகின்றது.
பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது. (குறிப்புகள் தேவை)
தேனீக்களிலிருந்து கிடைக்கும் பலவிதமான பயன்களைக் கருதி தேனீக்களை செயற்கையாக பானைகள் வைத்து அல்லது கூடுகள் அமைத்து வளர்க்கும் முறையே தேனீ வளர்ப்பு எனப்படுகின்றது. இங்கே தேனீக்கள் தங்கியிருந்தாலும், அவை சுதந்திரமாக வெளியே சென்று, தேன், மகரந்தச் சேகரிப்பில் ஈடுபடுவதனால், தாவர இனப்பெருக்கத்தில் தமது பங்கை வழங்குவதுடன், தேனீக்களால் சேகரிக்கப்படும் மேலதிக தேன் மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்றது.
அண்மைய காலங்களில் பெருந்தொகையாக தேனீக்கள் அழிந்துவருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தேனீக்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து வருவதாக தேனீ வளர்ப்பவர்களும், அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும், சில அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்[9]. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலி யில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. எனவே தேனீக்களின் அழிவு பலவகை பயிர்கள், பழவகைகள் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதனால், இது மிகவும் அவதானத்தில் கொள்ள வேண்டிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
"பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(16:69)
கிறித்தவர்களும் யூதர்களும் திருநூலாகப் போற்றுகின்ற திருவிவிலியத்தில் தேன் மற்றும் தேனீ பற்றிய குறிப்புகள் பல உள்ளன. அவற்றுள் ஒரு சில கீழே தரப்படுகின்றன:
தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.