பெரிய கண் சூரை (Big eye tuna) (துன்னஸ் ஒபஸஸ்) என்பது சூரையின் துன்னஸ் இன மீன் ஆகும். கானாங்கொளுத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. ஹவாயின் அகி எனப்படும் இரண்டு சூரை இனங்களில் மஞ்சள் துடுப்புச் சூரை, பெரிய கண் சூரை ஆகியன உள்ளடங்கும்.[1] பெரிய கண் சூரை மத்திய தரைக்கடலை தவிர்த்து அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதமான சமுத்திரங்களில் திறந்த நீரில் வாழ்கின்றது.
பெரிய கண் சூரை 250 செ.மீ (98 அங்குலங்கள்) அல்லது 8 அடி வரை நீளமாக வளரக்கூடியது. மீனொன்றின் அதிகபட்ச எடை 180 கிலோ கிராமை விட அதிகமாகும். சீரான பெரிய உடலுடன், பெரிய கண்களுடனான தலையைக் கொண்டது. நீளமான மார்புச் செட்டைகள் இரண்டாவது முதுகுச் செட்டை ஆரம்பிக்கும் இடத்திற்கு அப்பால் வரை காணப்படுகின்றன. இளம் மற்றும் முதிர்ந்த மீன்களில் முதலாவது, இரண்டாவது முதுகுச் செட்டைகளுக்கு இடையில் 13 அல்லது 14 முதுகெலும்புகள் அமைந்துள்ளன.
பெரிய கண் சூரை ஆக்சிசன் குறைந்த நீரையையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய தனித்துவமான உடலியலை உடையது. இவற்றின் கண்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. பெரிய கோள வடிவ கண்வில்லை குறைந்த ஒளி நிலைகளிலும் பார்வை நன்றாக செயற்பட உதவுகின்றது.[5]
பெரிய கண் சூரை மீன்கள் 2 - 4 ஆண்டுகளில் முதிர்ந்த பருவத்தை அடைகின்றன. முதிர்ந்த பருவத்தில் இவற்றின் நீளம் புவியியல் ரீதியாக வேறுபடுகிறது. 50% வீதமான மீன்கள் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் 135 செ.மீ நீளத்திலும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 102-105 செ.மீ நீளத்திலும் முதிர்ச்சியடைகின்றன.[6] ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் வெப்பநிலை 24 °C க்கு மேல் இருக்கும்போது முட்டையிடுதல் நடைபெறுகிறது. வடமேற்கு வெப்பமண்டல அத்திலாந்திக்கில் சூன், சூலை மாதங்களிலும், கினியா வளைகுடாவில் சனவரி, பெப்ரவரி மாதங்களிலும் இனப்பெருக்கம் நடைப்பெறுகின்றது.
இவை மீன்கள், ஓட்டுமீனகள் மற்றும் தலைக்காலிகளை உணவாக உட்கொள்கின்றன.[7][8]
பெரிய கண் சூரைகள் 2012 ஆம் ஆண்டில் உலகளவில், ஏறக்குறைய 450,500 மெட்ரிக் தொன் வணிகக் கப்பல்களால் பிடிக்கப்பட்டது.[9] வணிக மீன்பிடிப்பானது பிராந்திய ரீதியாக நிர்வகிக்கப்படுகின்றது. பசுபிக் பெருங்கடலுக்குள் மேற்கு மற்றும் மத்திய பசுபிக் மீன்வள கமிசன்[10], அமெரிக்க வெப்ப மண்டல துனா கமிசன் (ஐஏடிடிசி)[11] என்பவற்றாலும், இந்திய பெருங்கடலில் மீன் பிடிப்பானது இந்திய பெருங்கடல் துனா கமிசனினாலும் (ஐஓடிசி)[12], அத்திலாந்திக் கடலில் அத்திலாந்திக் துனாக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஆணையத்தினாலும் (ஐசிசிஏடி) நிர்வகிக்கப்படுகின்றன.[13]
பெரிய கண் சூரைகளின் பிடிபடும் விகிதம் கடந்த அரை நூற்றாண்டில் திடீரென குறைந்துவிட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் தொழில்துறை மீன் பிடிப்பு, கடல் வெப்பமயமாதல் என்பனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[14]
பெரிய கண் சூரை (Big eye tuna) (துன்னஸ் ஒபஸஸ்) என்பது சூரையின் துன்னஸ் இன மீன் ஆகும். கானாங்கொளுத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. ஹவாயின் அகி எனப்படும் இரண்டு சூரை இனங்களில் மஞ்சள் துடுப்புச் சூரை, பெரிய கண் சூரை ஆகியன உள்ளடங்கும். பெரிய கண் சூரை மத்திய தரைக்கடலை தவிர்த்து அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதமான சமுத்திரங்களில் திறந்த நீரில் வாழ்கின்றது.