நொறுங்கு விண்மீன் அல்லது பாம்புடலி முட்தோலிகள் (ஒஃபியூராய்ட்) என்பது முட்தோலிகளின் தொகுதியை சார்ந்த கடல் வாழ் உயிரினமாகும். இவை ஒஃபியூராய்டியா வகுப்பை சேர்ந்தவை. நொறுங்கு விண்மீன்கள் அசுட்டெரொய்டியா வகுப்பைச் சேர்ந்த கடல் விண்மீன்களுடன் நெருக்கமாக தொடர்புடையன. இவை பொதுவாக ஐந்து நீளமான, மெல்லிய, சவுக்கு போன்ற புயங்களை கொண்டிருக்கும். நெகிழ்வான புயங்களை பயன்படுத்தி நகருவதன் மூலம் கடல் அடிப்பரப்பில் வலம் வருகின்றன. மிகப்பெரிய நொறுங்கு விண்மீன்களில் புயங்கள் 60 செ.மீ (24 அங்குலம்) நீளத்தை எட்டக்கூடும்.
உலகில் 2,000 க்கும் மேற்பட்ட நொறுங்கு விண்மீன் இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் 1200 க்கும் மேற்பட்ட இனங்கள் 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் காணப்படுகின்றன.[1]
சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால ஆர்டோவிசியனில் இருந்து ஓபியூராய்டுகள் வேறுபட்டன.[2]
துருவ மற்றும் வெப்ப மண்டல கடற்பகுதிகள் உட்பட கடலின் பெரும் பரப்பில் இவை வசிக்கின்றன.[3] கூடை விண்மீன்கள் பொதுவாக ஆழமான பகுதிகளில் வாழுக் கூடியவை. நொறுங்கு விண்மீன்களில் சில இனங்கள் ஆழமான பரப்புக்களிலும் வாழ்வதாக அறியப்படுகின்றன. [4]நொறுங்கு விண்மீன்கள் கடலடிப்பாறைகளில் வாழும் உயிரினங்களில் ஒன்றாகும். ஏனைய முட்தோலிகளிலும் பார்க்க அதிக உவர் தன்மை வாய்ந்த நீரிலும் வாழக்கூடியவை. சிற்றென்புகளால் ஆன அகவன்கூடு காணப்படும்.[5]
ஏனைய முட்தொலிகள் போன்று நிறையுடலிகள் ஆரைச் சமச்சீர் உடையவை. தட்டுருவான உடல் மையத்தட்டு எனப்படும். மையத்தட்டில் இருந்து நீட்டப்பட்ட நீண்ட ஐந்து புயங்கள் காணப்படுகின்றன. இவற்றின் உருவ அமைப்பு கடல் விண்மீனிற்கு ஒத்தவை இருப்பினும் மையத்தட்டையும், புயங்களையும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியும். [6]
மையத்தட்டு அனைத்து உள் உறுப்புக்களையும் உள்ளடக்கியது. சமிபாடு, இனப்பெருக்கத்திற்கான உறுப்புக்கள் ஒரு போதும் புயங்களில் நுழையாது. மையத்தட்டின் அடிப்பகுதியில் வாய்ப்பகுதி காணப்படும். வாய் பகுதியை சூழ ஐந்து தாடைகள் அமையப் பெற்றிருக்கும். தாய்கற்றகடு கடல் விண்மீனில் போல் வாயெதிர் பகுதியில் அல்லாமல் தாடையொன்றுக்கு அருகில் அமைந்திருக்கும்.[6] மற்ற முட்தோலிகளுடன் ஒப்பிடுகையில் உடற்குழி குறைக்கப்பட்டிருக்கும்.
நீர் கலன் தொகுதியில் இருந்து வருவிக்கப்பட்ட குழாய் பாதங்கள் (tube feet) காணப்படுகின்றன. பொதுவாக நீர் கலன் தொகுதி ஒரு தாய்கற்றகட்டை கொண்டிருக்கும். குழாய் பாதங்கள் உறிஞ்சிகளை கொண்டிருப்பதில்லை.
மையத்தட்டை சூழ பிரதான நரம்பு வளையம் காணப்படும். எல்லா வகையான முட்தோலிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த நரம்புப் பின்னல்களை கொண்டுள்ளன.
அனேகமான ஒபிரோய்ட்கள் கண்கள் அல்லது வேறு சிறப்பான புலன் உறுப்புக்களை கொண்டிருப்பதில்லை. இருப்பினும் அவற்றின் மேற்றோலில் பலவகையான உணர்திறன் கொண்ட நரம்பு முடிவுகள் காணப்படுகின்றன. தொடுதல், வெப்பம், ஒளி, நீரின் தன்மை போன்றவற்றை உணரும் திறன் கொண்டவை.[6] புயங்களின் நுனியில் காணப்படும் குழாய் பாதங்கள் ஒளியை நன்கு உணரக்கூடியவை.
நொறுங்கு விண்மீனின் மையத்தட்டின் அடிப்புறத்தில் வாய் அமைந்திருக்கும். இவற்றில் குதம் காணப்படுவதில்லை. தாடைகளுக்கு பின்னால் குறுகிய உணவுக் குழாயும், வயிற்றுக் குழியும் உள்ளது. சமிபாடு வயிற்றின் 10 பைகள் அல்லது மடிப்புகளுக்குள் நிகழும். நீர் தளத்தில் காணப்படும் சிறிய கரிமத் துகள்கள் குழாய் பாதங்கள் வழியாக வாய்க்குள் நகர்த்தப்படுகின்றன.[6]இவை இறந்த அல்லது சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்ளும்.
வாயுப்பரிமாற்றமும் கழித்தல் செயல் முறையும் பர்சா (bursae) எனப்படும் அமைப்பினூடாக நடைப் பெறுகின்றன. பர்சாக்கள் ஒவ்வொன்றும் மையத்தட்டின் அடிப்பகுதியில் உள்ள புயங்களுக்கு இடையில் திறக்கும். பொதுவாக நொறுங்கு விண்மீனில் பத்து பர்சாக்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. [6]உடல் நீர்மத்தில் காணப்படும் தின்குழியங்கள் உடற்குழியணுக்கள் (coelomocytes) கழிவுப் பொருட்களை விழுங்கி உடலில் இருந்து வெளியேற்ற பர்சாக்களுக்குள் நகருகின்றன. அங்கிருந்து சுற்றி வர உள்ள நீருக்குள் தள்ளப்படுகின்றது. கழித்தலின் முக்கிய அமைப்புகளாக பர்சாக்கள் விளங்குகின்றன. [6]
பெரும்பான்மையான் இனங்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக காணப்படுகின்றது. சில இனங்கள் அழிதூக்கள் ஆகும்.
ஆண், பெண் இனங்கள் இனவிருத்தி அணுக்களை புறச்சூழலுக்கு வெளியேற்றுவதன் மூலம் புறக் கருக்கட்டல் நிகழ்கின்றது. சில இனங்கள் அடைகாப்பதன் மூலம் குடம்பிகளை (லார்வா) ஈனுவதும் உண்டு.[6]
சில நொறுங்கு விண்மீன்களின் இனங்கள் பிளவின் மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. ஒபியாகடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு புயங்களை கொண்ட சில நொறுங்கு விண்மீன்களின் மையத்தட்டு பாதியாக பிளவுப்பட்டு, இழந்த பகுதிகள் மீள் வளர்ச்சி அடைவதனால் இரு அங்கிகளாக பிரிகின்றது.[7]
நொறுங்கு விண்மீன்களின் புயங்கள் இழக்கப்பட்டால் அவை மீள உருவாகும். இவை பல்லிகளைப் போல எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள புயங்களை துண்டித்துக் கொள்கின்றன. இழக்கப்பட்ட புயங்கள் மீள் வளர்ச்சி அடையும்.
நொறுங்கு விண்மீன்கள் நெகிழ்வான புயங்களை அசைப்பதன் மூலம் வேகமாக நகருகின்றன.
60 இற்கும் மேற்பட்ட இனங்கள் ஒளிரும் தன்மை கொண்டவை. [8]இவற்றில் பெரும்பாலானவை பச்சை நிற அலைநீளங்களில் ஒளியை வெளியிடுகின்றன. நீல நிறத்தை உமிழும் உயிரிகளும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளன. ஒளிரக் கூடிய நொறுங்கு விண்மீன்கள் ஆழமான, ஆழமற்ற ஆகிய இரு கடற்பகுதிகளிலும் வசிக்கின்றன.
நொறுங்கு விண்மீன் அல்லது பாம்புடலி முட்தோலிகள் (ஒஃபியூராய்ட்) என்பது முட்தோலிகளின் தொகுதியை சார்ந்த கடல் வாழ் உயிரினமாகும். இவை ஒஃபியூராய்டியா வகுப்பை சேர்ந்தவை. நொறுங்கு விண்மீன்கள் அசுட்டெரொய்டியா வகுப்பைச் சேர்ந்த கடல் விண்மீன்களுடன் நெருக்கமாக தொடர்புடையன. இவை பொதுவாக ஐந்து நீளமான, மெல்லிய, சவுக்கு போன்ற புயங்களை கொண்டிருக்கும். நெகிழ்வான புயங்களை பயன்படுத்தி நகருவதன் மூலம் கடல் அடிப்பரப்பில் வலம் வருகின்றன. மிகப்பெரிய நொறுங்கு விண்மீன்களில் புயங்கள் 60 செ.மீ (24 அங்குலம்) நீளத்தை எட்டக்கூடும்.
உலகில் 2,000 க்கும் மேற்பட்ட நொறுங்கு விண்மீன் இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் 1200 க்கும் மேற்பட்ட இனங்கள் 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் காணப்படுகின்றன.
சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகால ஆர்டோவிசியனில் இருந்து ஓபியூராய்டுகள் வேறுபட்டன.
துருவ மற்றும் வெப்ப மண்டல கடற்பகுதிகள் உட்பட கடலின் பெரும் பரப்பில் இவை வசிக்கின்றன. கூடை விண்மீன்கள் பொதுவாக ஆழமான பகுதிகளில் வாழுக் கூடியவை. நொறுங்கு விண்மீன்களில் சில இனங்கள் ஆழமான பரப்புக்களிலும் வாழ்வதாக அறியப்படுகின்றன. நொறுங்கு விண்மீன்கள் கடலடிப்பாறைகளில் வாழும் உயிரினங்களில் ஒன்றாகும். ஏனைய முட்தோலிகளிலும் பார்க்க அதிக உவர் தன்மை வாய்ந்த நீரிலும் வாழக்கூடியவை. சிற்றென்புகளால் ஆன அகவன்கூடு காணப்படும்.