dcsimg

சுண்டெலிக் கூண்டு ( Tamil )

provided by wikipedia emerging languages

சுண்டெலிக் கூண்டு (Utricularia; Biovularia, யுட்ரிகுலோரியா; பயோவுலேரியா) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது லண்டிபுளோரேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது[1]. இச்செடிகளில் பூச்சிகளைப் பிடிப்பதற்குச் சுண்டெலிக் கூண்டு போன்ற பொறிகள் உள்ளன[2]. யுட்ரிகுலோரியா மிகச் சிறிய செடியாகும். இச்செடிகள் உலகம் முழுதும் சுமார் 200 வகைகளாகக் காணப்படுகிறாது. இந்தியாவில் மட்டும் 34 வகைகளும், தமிழ் நாட்டில் 17 வகைச் செடிகளும் உள்ளன.

இருப்பிடம்

இவைகள் ஒரு பருவச் செடியாகவும், பல பருவச் செடியாகவும் வளர்கின்றன. இச்செடிகள் தரையிலும், சில மரத்தின் பட்டையிலும், மற்ற பிற செடிகள் யாவும் தேக்கமாயிருக்கும் தண்ணீரிலும், சில தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கற்பாறைகள் மீதும், மற்றும் சில சேற்றிலும் இருக்கும்.

அமைப்பு

சுண்டெலிக்கூண்டு செடியில் வேர் கிடையாது. வேர் போன்று இருப்பவை இதன் இலைகளாகும். பூங்கொத்தைத் தாங்கும் பாகம் தவிர மற்ற பாகங்கள் தண்ணீர் மட்டத்தின் கீழேயேயிருக்கும். இலைகள் மிகவும் நுண்ணியதாக பிரிந்து இருக்கும். இந்த இலைகளுடன் கூடவே சிறு சிறு முட்டைகள் போன்ற பைகள் சிறிய காம்புடன் இணைந்து இருக்கும். இந்தப் பைகள் 0.3 மி.மீ முதல் 5 மி. மீ வரை விட்டம் கொண்டவை. இவைகளே பூச்சிகளைப் பிடிக்கப் பயன்படும் கருவிகளாகும். முட்டை போன்ற பைகளைக் கிழித்து நுண்ணோக்கி வழியே பார்த்தால் உள்ளே சிறு சிறு பூச்சிகள் அழுகிக் கொண்டிருப்பதைக் காணலாம். பூச்சிகள் அழுகும் போது உண்டாகும் பொருள்களை உணவுப்பொருள்களாக இந்தச்செடி பயன்படுத்துகிறது.

இந்தப் பைகளின் பயனை முதன் முதலாக கண்டுபிடித்தவர் சார்லஸ் டார்வின் ஆவார். இதற்கு முன் இந்தப் பைகள், செடியானது தண்ணீரில் மூழ்காமல் மிதக்கப் பயன்படும் மிதவையாக இருக்கலாம் என்று நினைத்திருந்தனர்.

இந்தச் செடியால் பிடிக்கப்படும் பூச்சிகளில் கொசுவின் லார்வா, நீர்த்தெள்ளு ஆகியவை சிலவாகும். ஒவ்வொரு பையும் கிட்டத்தட்ட முட்டை வடிவமாக இருக்கும். ஒருபுறம் தட்டையாக இருக்கும். இந்தத் தட்டையான பக்கத்தில் உள்ளே செல்ல ஒரு வழி இருக்கும் வழியை மறைத்தவாறு ஒரு கதவு போன்ற அமைப்பு உள்ளது. இது உட்புறமாகத் திறக்கும் "கீல்" வடிவ அமைப்பு கொண்டது. சாதரணமாக இந்தக் கதவு மூடியே இருக்கும். பையினுள் சிக்கிய பூச்சி கதவைத் திறந்துகொண்டு வெளியே வர முடியாது. கதவின் ஒருபுறம் அகலமாகவும், மற்றொரு புறம் குறுகியும் இருக்கும். அகலமாயிருக்கும் பாகத்தில்தான் " கீல் அமைந்திருக்கும். கதவின் வெளிப்புறத்தில் குறுகிய ஓரத்தில் அகன்ற ஓரத்தை நோக்கியவாறு 4 அல்லது 6 அல்லது அதற்கு மேலும் மெல்லிய முடிகள் அமைந்திருக்கும். இதைத் தவிர தட்டையான பாகத்தின் விளிம்பில் அகன்ற ஓரத்தில் அதாவது கதவின் கீல் அமைந்திருக்கும் பக்கத்தில் இரு பெரிய உணர்வுக் கொம்புகள் அமைந்திருக்கும்.

பூச்சிகளைப் பிடித்தல்

 src=
Bladderwort traps: long, usually branching (but here simplified), antennae guide Daphnia to the trapdoors of an aquatic bladderwort.
 src=
Bladderwort trap mechanism: seen from below, a bladder squeezed by water excretion suddenly swells as its trapdoor is released by an errant Daphnia. The bladder sucks in the nearby water, including the unfortunate animal which triggered the trap.

இவற்றின் பைகள் இரண்டு வித நிலையில் இருக்கும். ஒரு நிலையில் பைகளின் பக்கங்கள் உட்புறமாக இழுக்கப்பட்டு வளைந்து காணப்படும். மற்றொரு நிலையில் பைகளின் பக்கங்கள் வெளிப்புறமாக வளைந்து காணப்படும். உட்புறமாக வளைந்து காணப்படுவதே பூச்சிகளைப் பிடிக்கத் தாயாரான நிலையாகும். அப்போது பையின் உட்புறத்திலுள்ள நீரின் அழுத்தம் வெளியிலுள்ளதைக் காட்டிலும் குறைவாக இருக்கும். வெளியிலுள்ள நீர் உள்ளே நுழையாத வண்ணம் கதவு நுட்பமாக வாயிலில் பொருத்தப்பட்டிருக்கும். பையின் வாயிற்படி அருகில் தேன்போன்று இனிப்பான பசை சுரக்கிறது. இதனால் பூச்சிகள் கவரப்பட்டு வாய்ப்பகுதி அருகில் செல்கிறது. இந்த நிலையில் கதவின் வெளிப்புறத்திலுள்ள முடிகள் பூச்சிகளின் இயக்கத்தால் அசைக்கப்படும். இதனால் கதவு வெளியிலிருக்கும் தன்ணீரின் அமுக்கத்தைத் தாங்காமல் சட்டென்று உட்புறமாகத் திறந்துகொள்கிறது. அப்போது தண்ணீர் வேகமாக உள்ளே உறிஞ்சப்படுகிறது. தண்ணீருடன் வெளியிலுள்ள பூச்சியும் உறிஞ்சப்படும். கதவு பழையபடி மூடிக் கொள்ளும். பிறகு பூச்சிகள் வெளியே வர முடியாமல் உள்ளேயே இறந்து போகிறது. பைகளின் பக்கங்கள் இப்போது வெளிப்புறமாக வளைந்து காணப்படும். இந்த நிலைகளில் பைகளால் பூச்சிகளைப் பிடிக்க முடியாது.

செரிமானம்

பூச்சி உள்ளே சென்ற பிறகு பையில் முன்பை விட அழுத்தம் அதிகமாகிறது. இதனால் பையின் கதவு வெளிநோக்கி மூடிக் கொள்கிறாது. குறைந்த அளவு 30 நிமிடத்திலிருந்து 3 நாட்கள் ஆன பிறகே மறுபடியும் பூச்சிகளைப் பிடிக்க முடியும். இந்த நேரத்தில் பையினுள் உள்சுவரில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் சுரப்பிகளால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 90% நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் பிறகு நைட்ரேட்டு மற்றும் புரதப் பொருள்கள் சீரண சுரப்பிகளால் உறிஞ்சப்படுகிறது. நீர் வெளியேறிய பின் பையின் அழுத்தம் மெதுவாகக் குறைந்து மீண்டும் பூச்சிகளைப் பிடிக்கத் தயாராகிறது. பையின் கதவு உள்நோக்கித் திறப்பது 0.0015 வினாடி வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் வெளியே உள்ள பூச்சி தப்பிக்க முடியாமல் பையினுள் செல்கிறது. பூச்சிகள் வந்து பொறியில் சிக்கும் வரை செடிகள் காத்திருப்பதில்லை. பூச்சிகள் பைகளின் அருகில் நீந்திக் கொண்டிருந்தால் கூட அவை பைகளின் உள்ளே உறிஞ்சப்படுகிறது. கொசுவின் புழுப்பருவங்களை இச்செடிகள் பிடிப்பதால் கொசுத் தொந்தரவைக் குறைக்க இந்தப் புழுக்கள் வளரும் தண்ணீர் தேக்கங்களில் இச்செடிகளை வளர்க்க ஆலோசனை கூறுகிறார்கள்.

படிமங்கள்

 src=
சுண்டெலிக் கூண்டு
 src=
சுண்டெலிக் கூண்டு தாவரத்தின் பைகள்

ஊனுண்ணித் தாவரங்களின் பகுப்பு

உசாத்துணை

ஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள் ', அறிவியல் வெளியீடு. 2002.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சுண்டெலிக் கூண்டு: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

சுண்டெலிக் கூண்டு (Utricularia; Biovularia, யுட்ரிகுலோரியா; பயோவுலேரியா) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது லண்டிபுளோரேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடிகளில் பூச்சிகளைப் பிடிப்பதற்குச் சுண்டெலிக் கூண்டு போன்ற பொறிகள் உள்ளன. யுட்ரிகுலோரியா மிகச் சிறிய செடியாகும். இச்செடிகள் உலகம் முழுதும் சுமார் 200 வகைகளாகக் காணப்படுகிறாது. இந்தியாவில் மட்டும் 34 வகைகளும், தமிழ் நாட்டில் 17 வகைச் செடிகளும் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்