நீலன்கள் (Lycaenidae) பட்டாம்பூச்சிக்குடும்பங்களிலேயே இரண்டாவது பெரிய குடும்பமாகும். அதன்கீழ் 5000-உக்கும் மேலான சிற்றினங்கள் உண்டு.[1] மொத்தமுள்ள பட்டாம்பூச்சியினங்களில் இது 30% ஆகும்.
இக்குடும்பத்தைச்சேர்ந்த பெரும்பாலான இனங்களில் இறக்கைகளின் மேற்புறம் ஊதா நிறத்தில் இருக்கும். கீழ்ப்புறம் பழுப்பாகவோ வெள்ளையாகவோ கோடுகளும் புள்ளிகளும் காணப்படும். பின்னிறக்கைகளின் விளிம்பில் மெல்லிய சிறு வால்களைப்போன்ற அமைப்பும் சில இனங்களில் தூரிகைநார்களைப்போன்ற மயிர்களும் காணப்படும். ஆண்பூச்சியின் மேற்புறம் பளிச்சென்றும், பெண்பூச்சிகளின் மேற்புறம் வெளிர்நீலமாகவோ பழுப்பாகவோ நீலச்செதில்கள் தூவியதுபோல இருக்கும். இறக்கைநுனியில் ஆண்பூச்சிக்கு குறுகிய பட்டையும் பெண்ணுக்கு அகலமாகவும் இருக்கும். இந்தியாவின் மிகச்சிறிய பட்டாம்பூச்சியான சிறிய நீலன் இந்தக்குடும்பத்தைச் சேர்ந்தது.
இவை மலைகளிலுள்ள அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் வடகிழக்கு மாநிலக்காடுகளிலும் மேற்கு இமயமலைப்பகுதிகளிலும் காணப்படும்.
வெள்ளிக்கம்பிக்காரி போன்ற சில இனங்கள் திறனுடன் விரைந்து பறக்கவல்லவை. நீலன், புல் நீலன் முதலானவை திறனற்றுப்பறக்கும். முன்னங்கால்கள் சிறிதாக இருப்பதால் ஆண்பூச்சிகள் பின்னாலுள்ள நான்கு கால்களையே பயன்படுத்தும். பெரும்பாலான ஆண்பூச்சிகள் இறக்கையை விரித்து வெயில்காயும். சில இனங்களின் ஆண்கள் ஈரிப்பான இடங்களில் அமர்ந்து உறிஞ்சும்.
நீலன்கள் பலவகையான உணவுப்பழக்கங்களைக் கொண்டிருக்கின்றன. இலைகளைத் தின்பதுடன் சில இனங்கள் அசுவினி, இளம் எறும்புகள் போன்ற பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றன. சில நீலன்கள் எறும்புகளுடன் வேதிப்பொருள்மூலம் தொடர்புகொண்டு[2] விந்தையானவகையில் தங்கள் உணவைப்பெறுகின்றன. எறும்புகளை தங்கள் வயிற்றிலிருக்கும் உணவைக் கக்கவைத்து அவற்றை உட்கொள்கின்றன. 75% நீலன்கள் எறும்புகளுடன் எவ்வகையிலாவது தொடர்புகொண்டுள்ளன.[3] அது இருபுறமும் பயன் நல்கும்விதமாகவோ, புல்லுருவியாகவோ, கொன்றுண்ணியாகவோ அமையலாம்.
சில இனங்களில் எறும்புகள் இப்பூச்சிகளின் கம்பளிப்புழுக்கள் செடியின்தண்டிலிருந்து பெற்றுச்சுரக்கும் தேனைப்பெற்றுக்கொண்டு பதிலுக்கு உணவு புகட்டுகின்றன.[3]
நீலன்கள் (Lycaenidae) பட்டாம்பூச்சிக்குடும்பங்களிலேயே இரண்டாவது பெரிய குடும்பமாகும். அதன்கீழ் 5000-உக்கும் மேலான சிற்றினங்கள் உண்டு. மொத்தமுள்ள பட்டாம்பூச்சியினங்களில் இது 30% ஆகும்.