நெய்தல் அல்லது கருங்குவளை (Nymphaea violacea), நீல லில்லி என்றும் அழைக்கப்படுவது,[1] நிம்பேயா இனத்தைச் சேர்ந்த ஒரு நீர்த்தாவரமாகும். இது 'அல்லி' இனத்தைச் சார்ந்தது.
இத்தாவரமானது ஆஸ்திரேலியாவில், குறிப்பாக கிம்பர்லீஸிலும், குயின்ஸ்லாந்து மற்றும் வட ஆள்புலம் பிராந்தியத்தின் வடக்கு பகுதிகளிலும் காணப்படுகிறது.[2]
இதன் மலர்கள் ஊதா, நீலம் அல்லது வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கும்.[2] நெய்தல் என்னும் நீர்க்கொடி, தாமரை. ஆம்பல். குவளை, நீலம் கொட்டி, முதலியவற்றுடன் சேர்ந்தும் தனித்தும் நன்னிர் நிலைகளிலும் சிற்றருவிகளிலும் உப்பங்கழியிலும் வளரும் இயல்புள்ளது. வடித்தெடுத்த வேலின் இலை வடிவான பசிய இலைகளை உடையது. இவ்விலைகள் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். இதற்கு அடிமட்டத் தண்டு என்று பெயர். நீண்ட இலைக் காம்புகளினால் மேல் எழும்பி இலைகள் நீரில் மிதக்கும்.
இத்தாவரப் பொருட்கள் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினரின் பாரம்பரிய உணவு ஆகும். இதன் கிழங்கு, தண்டு, பூக்கள், விதைகள் போன்ற அனைத்தும் உண்ணக்கூடியவை
இந்த இனத்தில் உள்ள மற்ற தாவரங்களைப் போலவே, இந்த தாவரத்திலும் உளத்தூண்டி காரப்போலி அபோர்பைன் (அபோமார்பைனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது) உள்ளது, இவற்றை உட்கொள்ளும்போது மயக்கத்தை அளிக்கும்.[3]
இத்தாவரத்தை சங்க இலக்கியங்களில் கருங்குவளை, கருநெய்தல் என குறிக்கப்படுகின்றது. உலக வழக்கில் நெய்தல், குவளை, நீலம். நீலோற்பலம், பானல், காவி. சிந்திவாரம், நீலப்பூ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. கடலைச் சார்ந்த கழியிலும், நல்ல நீர் நிலைகளிலும் நெய்தற் கொடி வளரும்.
'காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்' (குறிஞ். 84) எனக் கபிலர் கூறும் நெய்தலுக்குக் கருங்குவளை என்று பொருள் கண்டார் நச்சினார்க்கினியர். நெய்தல் நிலத்துச் சுனை மலராகிய நெய்தலைப் புலவர் பெருமக்கள் வியந்து கூறுவர். சங்க இலக்கியத்துள் நெய்தலைப் பற்றிய பாடல்கள் பல உள. அகநானூற்றில் பத்துப் பத்தான எண்களைக் கொண்ட 40 பாடல்களும், கலித்தொகையில் 33 பாடல்களும், நெய்தற் கலிப் பாக்களும், ஐங்குறு நூற்றில் நெய்தல் பற்றிய 100 பாக்களும் திணை மாலை நூற்றைம்பதில் 31 பாக்களும் உள்ளன. இவையன்றிக் குறுந்தொகை, நற்றிணை, திணை மொழி ஐம்பது முதலியவற்றிலும் நெய்தல் திணையைப் பற்றிய பாக்கள் மலிந்துள்ளன.
நெய்தல் மலர் கருநீல நிறமும் நறுமணமும் உள்ளது.அகன்று நீண்ட இதழ்களை உடையது. பூ நீலமணி போன்றதெனவும், கண் போன்றதெனவும் நெடுநேரம் சுனையாடிக் கயம் மூழ்கும் மகளிரின் உள்ளகம் சிவந்த கண்களைப்போன்றதெனவும் கூறுவர்.
"நீள்நறு நெய்தல்"
"மணிமருள் நெய்தல்"
"கணைத்த நெய்தல் கண்போல் மாமலர்"
"மணிக்கலங் தன்ன மா இதழ் நெய்தல்"
"சிறுகருநெய்தல் கண்போல் மாமலர்"
"பாசடைகிவங்த கணைக்கால் நெய்தல்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்"
நெய்தல் என்பது எது என்று தாவரவியலாளர்களுக்கும், தமிழ் புலவர்களும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது. உரையாசிரிரயர் நச்சினார்க்கினியர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் 'நீள் நறு நெய்தல்' என்ற குறிஞ்சிப் பாட்டு அடிக்கு (79) நீண்ட நறிய நெய்தற் பூ என்று கூறினாராயினும், 'கட்கமழ் நெய்தல்' என்றவிடத்து (குறிஞ். 84) தேன் நாறுங் கருங்குவளை என்று உரை கூறினார். மேலும் அவரே 'தண்கயக்குவளை' (குறிஞ். 63) என்றவிடத்து 'குளிர்ந்த குளத்திற்பூத்த செங்கழு நீர்ப்பூ' என்று உரைவகுத்தார். ஆகவே நெய்தல் என்பது கருங்குவளை எனவும், குவளை என்பது செங்கழுநீர் எனவும் எளிதில் அறியக்கூடியதாக உள்ளது.[4]
நெய்தல் அல்லது கருங்குவளை (Nymphaea violacea), நீல லில்லி என்றும் அழைக்கப்படுவது, நிம்பேயா இனத்தைச் சேர்ந்த ஒரு நீர்த்தாவரமாகும். இது 'அல்லி' இனத்தைச் சார்ந்தது.