புலி (Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.[5] இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி அமுர் ஆற்று வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மர்றும் சுமாத்திரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.
புலியானது தசைநிறந்த பெருவுடலும் வலிமையான முன்னங்கால்களும் தன் உடலில் பாதியளவு வாலும் கொண்டுள்ளது. இதன் கடினமான அடர்ந்த உடல் மயிர்கள் பழுப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறங்களில் இருக்கும். மேலும் உடலில் உள்ள செங்குத்தான கருநிறப் பட்டைகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமாக இருக்கும். புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. எனவே அதன் உடல் மயிர்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீங்குவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.
காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும்.[6] மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா) "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை,[7] இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை.[7] ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது.[8] கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர்.[9] முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.[10]
புலி இனத்தில் உள்ள எட்டு கிளையினங்களில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவியிருந்தன. தற்போது அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது வாழும் கிளையினங்கள், அவற்றின் பண்புகள் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:
1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளில் அழிந்துபோய் இருந்தது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போயிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின.[32] சிங்கப்புலி மற்றும் புுலிச்சிங்கம் எனப்படும் கலப்பினங்களை உருவாக்கச் சிங்கங்களைப் புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது.[33] இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும்.[34] ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.[34]
அரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும்.[35]
வெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக் என்று அறியப்படுகிறது.[36] இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது.[37][38] மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூடப் பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன.[39] அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள்[40] மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை.[37][41] பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன.
கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும்.[42] தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விடப் பெரியதாக இருக்கின்றன.
"ஊதா" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும்.[36]
புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ2 இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன.
தனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த "விதிகளும்" அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆண் சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் குட்டிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் உண்ண அனுமதிக்கின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புலிகளும் தங்கள் இரையை பகிர்ந்துகொள்வதும் காணப்பட்டுள்ளது. ஸ்டீபன் மில்ஸின் புலி என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வை ரத்தம்பூரில் வால்மிக் தப்பரும் ஃப்த்தே சிங் ரத்தோரும் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வரும் மேற்கோளில் விளக்குகிறார்:[43]
பத்மினி என்று அழைக்கப்படும் ஒரு ஆதிக்கமிக்கப் பெண் புலியானது 250 கி.கி (550-பவுண்ட்) உடைய ஒரு ஆண் நீலான் மானைக் கொன்றது - நீல்கை என்பது மிகப்பெரிய மானினம் ஆகும். அவர்கள் விடிந்தபிறகு அந்த மானைக் கொன்ற இடத்தில் அந்தப் பெண் புலியையும் அதன் மூன்று 14 மாதக் குட்டிகளையும் கண்டனர். மேலும் அந்தக் குட்டிகள் எந்தவித இடையூறுமின்றி அவை இருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தில் 2 வயது வந்த பெண்புலிகளும் ஒரு வயது வந்த ஆண் புலியும் சேர்ந்துகொண்டன - அவை பத்மினியின் முந்தைய ஈற்று வாரிசுகளாகும் மேலும் இரண்டு தொடர்பில்லாத புலிகளும் சேர்ந்து கொண்டன. அவற்றில் ஒன்று பெண் புலி மற்றொன்று அடையாளம் காணப்படவில்லை. மூன்று மணியளவில் அந்தக் கொல்லப்பட்ட இரையைச் சுற்றி ஒன்பது புலிகளுக்குக் குறையாமல் இருந்தன.
இளம் பெண் புலிகள் தனது இருப்பிடத்தை முதலில் அமைக்கும்போது அவை தமது தாயின் இருப்பிடப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைக்கின்றன. பெண்புலி மற்றும் அதன் தாய்ப்புலி ஆகியவற்றின் பிரதேசத்தின் பொதுவான பகுதியானது காலப்போக்கில் குறைகிறது. இருப்பினும் ஆண் புலிகள் அவற்றின் உறவான பெண் புலிகளைவிட அதிக இடத்தை அமைத்துக்கொள்கின்றன. மேலும் அவை இளம் வயதிலேயே தனியான இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு வெளியேற்றப்படுகின்றன. ஒரு இளம் ஆண் புலியானது மற்ற ஆண் புலிகளின் எல்லைக்குள் அடங்காத பகுதியைப் பார்த்து ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற ஆணின் பிரதேசத்தில் பிற ஆணிற்கு போட்டியாக மாறத் தேவையான வலிமை மற்றும் வயது வரும்வரை தற்காலிகமாக வாழும். தமது சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறித் தனிப்பட்ட பிரதேசங்களை அமைப்பதற்காக வெளியேறிய இளம் புலிகளில்தான், வயதுவந்த புலிகளின் அதிகபட்ச இறப்பு வீதம் (ஆண்டுக்கு 30-35%) பதிவாகியுள்ளது.[44]
பிற பகுதியைச் சேர்ந்த பெண் புலிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைப் பெண் புலிகள் சகித்துக்கொள்ளும் அளவுக்கு ஆண் புலிகள் சகித்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான பிரதேச சிக்கல்கள், நேரடியான தாக்குதல் மூலமாக இல்லாமல் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதன் மூலமே வழக்கமாகத் தீர்க்கப்படுகின்றன. பலம் குறைவான புலிகள் புரண்டு விழுந்து முதுகு தரையில் படிய விழுந்து தோற்ற பல காட்சிகள் காணப்பட்டுள்ளன.[45] பலசாலியான புலியானது ஒருமுறை தனது பலத்தை நிலைநாட்டிவிட்டால் அந்த ஆண் புலியானது தோல்வியடைந்த புலியைத் தன் பகுதிக்குள் வசிக்க அனுமதிக்கிறது. ஆனாலும் மிக நெருக்கமாக வராதவரை மட்டுமே அவை அனுமதிக்கப்படுகின்றன.[44] ஒரு பெண் புலி காமவேட்கையில் இருக்கும்போது மட்டுமே இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் ஆபத்தான சண்டை நிகழும். அதன் விளைவாக ஏதேனும் ஒரு ஆண் புலி இறக்கலாம். இருந்தபோதிலும் இயல்பாக இது போன்ற நிகழ்வு அரிதுதான்.[44][46]
தனது பிரதேசங்களை அடையாளம் காண ஆண் புலிகள் மரங்களில் சிறுநீர் மற்றும் மலவாய்ச் சுரப்பிகளில் தோன்றும் சுரப்புநீர் ஆகியவற்றை தெளித்து அதனைக் குறியிடுகின்றன. அதேபோல் கழிவுகளைப் பரப்பித் தடம்பதிப்பதன் மூலமும் குறியிடுகின்றன. ஆண்புலிகள், பெண்புலிகளின் இனப்பெருக்கத்திற்கான நிலமையை அவற்றின் சிறுநீர் குறியீடுகளை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக அறிந்து உந்தலுணர்வை முகச்சுளிப்பைக் கொண்டு காட்டுகின்றன, இது ஃப்ளெமென் பதில் என்று அழைக்கப்படும்.
வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது[47] அதற்குப் பதிலாகக் கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றைத் தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.
காடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட்டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன.
வயதுவந்த யானைகளைப் பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது.[48] இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன.[49]
வயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும்.[50] புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காகத் தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.[49]
புலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும்.[51] பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது.[51]
பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டுச் சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது.[52] இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன.[53] சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது.[54] புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்குப் போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது.[49] மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன.[55]
1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் "கெங்ஹிஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது.[56] இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது.
புலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது.[57] ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாகப் பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் காலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் 1 கிலோகிராம் (2.2 lb) எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றைத் தனியாக வளர்க்கின்றன, அவற்றைத் தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காகச் சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூடப் புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம்.[57] புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாகக் குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை.[57]
பொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம்.[56] இந்தக் குட்டியானது பொதுவாகச் சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பதில்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன.[57]
ஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாகச் சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம்.[58]
புலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற பயங்கர மிருகங்களைக் கூடச் சிலநேரங்களில் கொல்லலாம்.[59][60][61] இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும்.[49] சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாகப் புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன.[48] பொதுவாகத் தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன.[62] இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது.[63][64] செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாகப் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது.[55] சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன.[7] தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன.[10] சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலைத் தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே.[65]
பொதுவாகப் புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போலத் தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்துச் சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு.
காட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது தோலுக்காக வேட்டையாடுதல் மற்றும் அதன் இருப்பிடத்தை அழித்தல் ஆகிய செயல்களால் மிகவும் குறைந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 100,000 புலிகளாக மதிப்பிடப்பட்டிருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது காடுகளில் அதன் எண்ணிக்கை 2,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.[67] சில மதிப்பீடுகள் இன்னும் குறைவாக, 2,500ஐ விடக் குறைவான முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய புலிகளே உள்ளதாகக் கூறுகின்றன. முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவையின் எண்ணிக்கை 250க்கு அதிகமான புலிகளைக் கொண்டுள்ள துணை எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கூறுகின்றன.[68] சுமார் 20,000 புலிகளைத் தற்சமயம் காப்பகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அழிவு ஆபத்தானது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இவ்வாறு காப்பகப்படுத்தப்பட்டவையின் எண்ணிக்கையில் 4-5,000 புலிகள் சீனாவில் உள்ள வியாபார நோக்கம் கொண்ட புலிகள் பண்ணைகளில் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த மரபணு வேறுபாடு கொண்டவை.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. மனித முன்னேற்றம் இல்லாத இடங்களை மீட்டெடுத்து நன்கு கண்காணிக்கப்படும் சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது. இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைகள் சில சந்தேகங்களுக்குள்ளாயின. சமீபத்தில் பிறப்பிக்கபட்ட சிற்றினங்கள் சட்டம், புலிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த சிற்றினங்களை வாழ்வதற்கு அனுமத்தித்தது. இது அத்திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் அறிக்கை 12 பிப்ரவரி 2008 அன்று வெளியிடப்பட்டது. அது இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு சட்டவிரோதமாக வேட்டையாடுதலே நேரடியான காரணமாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[69]
1940களில் காடுகளில் உள்ள சைபீரியன் புலியானது 40 புலிகள் என்ற அளவில் அழிந்துபோகும் நிலையில் இருந்தது. சோவியத் யூனியன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வேட்டையாடுதலுக்கு எதிரான அமைப்புகள் வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தின. மேலும் பாதுகாப்பு பகுதிகளின் (ஜபோவெட்னிக்குகள்) குழுக்கள் தொடங்கப்பட்டது. அவை புலிகளின் எண்ணிக்கையைச் சில நூறுகளாக அதிகரிக்க வழிவகுத்தது. 1990களில் ரஷ்யாவின் பொருளாதரம் சீர்குலைந்தபோது வேட்டையாடுதல் மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட மிகுந்த வருமானமளித்த சீனச்சந்தையை முற்றுகையிட அணுகினர். அப்பகுதிகளில் மரம்வெட்டுதல் அதிகரித்தது. உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய வளங்களை முதலீடு செய்ய வழிவகுத்தது, பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு முன்னேற்ற விகிதத்தையும் காடுகளை அழிப்பதையும் அதிகரிக்கச் செய்தது. இனங்களைக் காப்பதில் உள்ள முக்கியத் தடையாக இருப்பது தனிப்பட்ட புலிகளுக்குத் தேவைப்படும் பரந்த அளவிலான பிரதேசமே (ஒரு பெண் புலிக்குச் சுமார் 450 கி.மீ.2 வரை தேவைப்படுகிறது) ஆகும்.[6] தற்போதுள்ள பாதுகாப்பு முயற்சிகள் உள்ளூர் அரசாங்கங்களாலும் உலகளாவிய நிதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் போன்ற சர்வேதச அமைப்புகளின் ஆதரவில் உள்ள NGOக்களின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது.[70] இந்தப் பெரிய பூனையினம் குளம்பு விலங்குகளின் எண்ணிக்கையை ஓநாய்களின் எண்ணிக்கையை விடக்குறைப்பதாலும் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாலும், கிழக்குப் பகுதி வேட்டையாடுபவர்களைச் சமரசம் செய்வதற்காக ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் கொண்டு ஓநாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர்.[71] தற்போது 400-550 விலங்குகள் காடுகளில் உள்ளன.
திபெத்தில் புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் உடைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள், அவற்றின் தயாரிப்புகள் அல்லது அவற்றின் வழிவந்த பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம் எடுக்குமாறு தலாய்லாமா 2006 ஜனவரியில் அறிவுரை கூறினார். வேட்டையாடப்பட்ட புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்களுக்கு கிராக்கிக்கு இது நீண்டகால வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கப்படுகிறது.[72][73][74]
இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரான பில்லி அர்ஜான் சிங் என்பவரே வனமீட்பு செயலில் முதலில் ஈடுபட்டவர். அவர் தான் வளர்த்துவந்த விலங்குகள் பூங்காவில் பிறந்த தாரா என்ற பெண் புலியை 1978 ஆம் ஆண்டில் தத்வா தேசியப் பூங்காவின் காடுகளில் மீண்டும் விட்டார். ஒரு பெண்புலி பலரைக் கொன்று கொண்டிருந்தது. பின்னர் அது சுட்டுக் கொல்லப்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதையே பின்பற்றினர். அரசு அதிகாரிகள் அந்தப் புலியே தாரா எனவும் சிங் அது தாரா இல்லை எனவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து வாதிட்டுக்கொண்டனர். தாரா பகுதியளவு வங்கப்புலியாக இருந்ததால் அதன் அறிமுகத்தினால், அந்தப் பகுதியைச் சேர்ந்த புலிகளின் மரபணுத் தொகுதியில் கலப்படம் ஏற்பட்டது. அது வளர்க்கப்பட்ட இடமான ட்வைக்ராஸ் விலங்கியல் பூங்காவில் சரியாக இல்லாத பதிவுகளின் காரணமாக இந்த உண்மை முதலில் தெரியவில்லை. இதனால் வனமீட்புச் செயல் மதிப்பை இழந்தது.[75][76][77][78][79][80][81][82][83][84]
சீனப் புலிகளைக் காப்போம் என்ற அமைப்பு சீனாவின் மாநில வனப்பாதுகாப்பு ஆணையம் மற்றும் சீனப் புலிகள் தென்னாப்பிரிக்க அறக்கட்டளையும் இணைந்து சீனப் புலிகளை மீண்டும் காடுகளில் விடுவது தொடர்பான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. பெய்ஜிங்கில் 2002 நவம்பர் 26 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனாவில் தென்சீனப் புலிகள் உள்ளிட்ட புலிகளை மீண்டும் காட்டில் விட்டு அவற்றின் இயல்பான காட்டை உருவாக்கித் தரும் ஒரு பிரதான சரணாலயத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு சீனப் புலிப் பாதுகாப்பு மாதிரியை வழங்கியது. சில காப்பகங்களில் பிறந்த தென்சீனப் புலிகள் அவற்றின் வேட்டையாடும் திறன்களை மீண்டும் பெறும் பயிற்சிக்காக அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் விட்டு மிகவும் அருகிவரும் தென்சீனப் புலிகளை மீண்டும் காட்டில் விடுவதையே சீனப் புலிகளைக் காப்போம் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ஒரு புலிகள் சரணாலயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சரணாலயம் தயாரானதும் அந்தப் புலிகளை மீண்டும் சீனாவின் சரணாலயத்தில் விடப்படும்.[85] பயிற்சிக்கு விடப்பட்ட புலிகளின்வழி உருவான குட்டிகள் சீனாவின் பிரதான சரணாலயத்தில் விடப்படும். முதலில் விடப்பட்ட விலங்குகள் தொடர்ந்து இனப்பெருக்கத்தைத் தொடர தெனாப்பிரிக்காவிலேயே இருக்கும்.[86]
இதற்குத் தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அங்கு தென்சீனப் புலிகளுக்குத் தேவையான திறமையும் வளங்களும், நிலமும் விளையாட்டு வாய்ப்பும் கிடைப்பதே காரணமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகள் வெற்றிகரமாகத் தாமே சொந்தமாக வாழவும் வேட்டையாடவும் தேவையான திறமையைப் பெற்றுவிட்டன.[85] இந்தத் திட்டம் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது. இந்தத் திட்டத்தின்போது 5 புலிக்குட்டிகள் பிறந்தன. இந்த 2வது தலைமுறைக் குட்டிகள் தமது தாயிடமிருந்தே வேட்டையாடுதல் மற்றும் வாழ்தலுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும்.[87]
ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் புலி வேட்டை என்பது மிக அதிக அளவில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க மாநிலங்களின் மஹராஜாக்களால் கௌரவமிக்க பாராட்டுக்குரிய விளையாட்டாப் போற்றப்பட்டது. சில வேட்டைக்காரர்கள் புலிகளை நடந்து சென்று வேட்டையாடினர். பிறர் உயர்பந்தல்களில் அமர்ந்துகொண்டு ஆடு அல்லது மாட்டை இரையாகப் பயன்படுத்தியும் வேட்டையாடினர். இன்னும் சிலர் யானையின் மீது அமர்ந்தபடியும் வேட்டையாடினர்.[88] சில நேரங்களில் கிராமவாசிகள் கொட்டு வாத்தியங்களை முழங்கி மிருகங்களை மரண வளையத்திற்குத் துரத்த உதவினர். புலிகளின் தோலை உரித்தல் குறித்து பல விளக்கமான வழிமுறைகள் உள்ளன. மேலும் புலிகளின் தோலுரித்துப் பதப்படுத்தலில் நிபுணர்களும் இருந்தனர்.
புலிகள் வழக்கமாக மனிதர்களை இரையாக உண்பதில்லை எனினும், பிற பூனையினங்களை விடவும் அதிகமாக மனிதர்களைக் கொன்றுள்ளன. குறிப்பாகப் புலிகளின் வாழிடங்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் தொகையும், மரம் வெட்டுதலும் விவசாயமும் நடைபெறும் பகுதிகளில் இது அதிகமாக நிகழ்கிறது. மனிதர்களை உண்ணும் புலிகள் பெரும்பாலும் பல்லிழந்த,வயது முதிர்ந்த புலிகளே. இவை தமக்குத் தேவையான இரையை வேட்டையாடும் திறன் இல்லாமல் போவதால் மனிதர்களை உண்ண முயற்சிக்கின்றன.[89] மனிதர்களை உண்ணும் புலிகள் என அறியப்பட்ட அனைத்துப் புலிகளுமே மெரும்பாலும் விரைவில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு விட்டன அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டு விட்டன. தொடர்ந்து மனிதர்களைக் கொல்லும் புலிகள் கூட மனித உண்ணிச் சிறுத்தைப் புலிகள்போல மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதில்லை. அவை வழக்கமாகக் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும்.[90] இருப்பினும் கிராமங்களிலும் சில நேரங்களில் தாக்குதல் நடைபெறுகிறது.[91] இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் குறிப்பாகக் குமாயன், கர்வால் மற்றும் வங்காளத்தின் சுந்தரவன சதுப்புநிலத் தாழ்நிலங்களில் ஆரோக்கியமான புலிகள் மனிதர்களை வேட்டையாடுவது மிகக் குறிப்பிடக்கூடிய ஒரு சிக்கலாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான அவற்றின் தாக்குதல் சுந்தரவனப் பகுதிகளில் அதிகரித்துள்ளது.[92]
சீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர்.[93] இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[94][95]
விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டபடி அமெரிக்காவில் மட்டும் 12,000 புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம்.[96] அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[96]
அமெரிக்காவின் அதிக புலி எண்ணிக்கைக்கு ஒரு பங்குக் காரணம், சட்டமாக்குவதில் உள்ள அக்கறையின்மையாகும். அமெரிக்காவின் 19 மாநிலங்களில் மட்டுமே தனிப்பட்ட முறையில் புலிகளைச் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்கள் உரிமம் இருந்தால் புலிகளை வளர்க்க அனுமதிக்கிறது. மேலும் 16 மாநிலங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை.[96]
அமெரிக்காவின் விலங்கியல் பூங்காக்களிலும் சர்க்கஸிலும் விலங்குகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக, 1980 மற்றும் 1990களில் விலங்குக் குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியது. இதனால் அதன் விலை மிகவும் குறைந்தது.[96] SPCA அமைப்பு ஹௌஸ்டன் பகுதியில் மட்டும் 500 சிங்கங்களும் புலிகளும் பிற பூனையினங்களும் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.[96]
1983 ஆம் ஆண்டில் வெளியான ஸ்கார்ஃபேஸ் என்ற திரைப்படத்தில் டோனி மாண்டனா ஏற்று நடித்த கதாப்பாத்திரம், அமெரிக்கனின் கனவு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பதில் மிகுந்த வெறி கொண்டவராக நடித்திருப்பார். அதில் அவர் கண்ணோட்டத்தில் வீட்டில் இருக்க வேண்டியவற்றில் ஒரு செல்லப் பிராணியாகப் புலியும் இருக்கும்.
கிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் மிருகங்களின் அரசனாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியே மேலோங்கி இருக்கிறது.[97] அது கௌரவம், அச்சமின்மை மற்றும் கோபத்தையும் குறிப்பதாக உள்ளது.[98] அதன் நெற்றியில் சீன மொழியில் எழுத்தில் "ராஜா" எனப் பொருள் குறிக்கும் ஓர் எழுத்தான 王 என்பதை ஒத்த குறி உள்ளது; இதனால் சீனா மற்றும் கொரியாவில் கார்ட்டூன் வருனனைகளில் புலியை நெற்றியில் அந்த 王 எழுத்தைக் கொண்டே குறிக்கின்றனர்.
சீனாவின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ள புலி, சீன இராசியைக் குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு சீனக் கலை மற்றும் தற்காப்புக் கலைகளில் புலியானது பூமியின் சின்னமாகவும் சீன ட்ராகனுக்கு- இணையானதாகவும் இடம்பெறுகிறது. புலியும் ட்ராகனும் முறையே பொருள் மற்றும் ஆத்மாவைக் குறிக்கின்றன. உண்மையில் தென் சீனத் தற்காப்புக் கலையான ஹுங் கா, புலி மற்றும் கொக்கு ஆகியவற்றின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். பேரரசான சீனாவில் புலி போரின் உருவகமாக விளக்கியது. சில நேரம் உயர் இராணுவத் தளபதி (அல்லது தற்போது உள்ள பாதுகாப்புச் செயலர்) ஆகியோரைக் குறித்தது.[98] அதே நேரம் பேரரசரும் அரசியும் ட்ராகன் மற்றும் ஃபோனிக்ஸ் ஆகியவற்றால் குறிக்கப்பட்டனர். வெள்ளைப் புலியானது (சீனம்: 白虎; பின்யின்: Bái Hǔ) சீன இராசி மண்டலங்களின் நான்கு சின்னங்களில் ஒன்றாகும். அது சில நேரங்களில் மேற்கின் வெள்ளைப் புலி (西方白虎) எனவும் அழைக்கப்படுகிறது. அது மேற்கையும் இலையுதிர்க்காலத்தையும் குறிக்கிறது.[98]
புத்த மதத்தில் அறிவற்ற மூன்று உயிரினங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. அதில் குரங்கு பேராசையையும், மான் காதல் நோயையும், புலி கோபத்தையும் குறிக்கின்றன.[99]
தங்குஸிக் மக்கள் சைபீரியன் புலியை ஒரு தெய்வமாகவே கருதினர். அதை "தாத்தா" அல்லது "கிழம்" என அழைத்தனர். உடேஜ் மற்றும் நனாய் மக்கள் அதை "அம்பா" என அழைத்தனர். மஞ்சு மக்கள் சைபீரியன் புலியை ஹூ லின் ராஜா எனக் கருதினர்.[9]
பரவலாக வழிபடப்படும் இந்துக் கடவுளும் தேவி-பார்வதியின் ஒரு அம்சமுமானதுர்கா, பத்துக் கரங்களுடன் போர்க்களத்திற்கு பெண்புலி அல்லது (பெண் சிங்கத்தில்) பவனி வரும் போர் வீராங்கனையாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியக் கடவுள் ஐயப்பனும் புலியில் பவனி வருபவராக விளக்கப்படுகிறார்.[100]
ஆசியாவின் உருமாற்றக் கதைகளில் ஓநாயாக மாறக்கூடியவர்களின் பாத்திரங்களுக்குப் பதிலாகப் புலியாக மாறக்கூடியவர்கள் இடம்பெற்றனர்;[101] இந்தியாவில் இவர்கள் தீய மந்திரவாதிகளாகவும் மலேசியாவில் ஓரளவு நியாயமானவர்களாகவும் விவரிக்கப்பட்டனர்.[102]
புலி இலக்கியத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது; ருட்யார்ட் கிப்ளிங் மற்றும் வில்லியம் ப்ளேக் ஆகிய ஆசிரியர்கள் முறையே த ஜங்கில் புக் மற்றும் த சாங்க்ஸ் ஆப் எஸ்பீரியன்ஸ் ஆகிய தங்கள் படைப்புகளில் புலியை மிரட்டும் மற்றும் வீரமுள்ள அச்சமூட்டும் மிருகமாகச் சித்தரித்துள்ளனர். த ஜங்கில் புக் கதையில் ஷேர் கான் என்ற புலி, மோக்லி என்ற கதாநாயகனின் ஜென்ம விரோதியாகும். இருப்பினும் பிற சித்தரிப்புகள் அவ்வளவு மிக நல்லவை: ஏ.ஏ. மில்னேவின் வின்னீ த பூஹ் கதைகளில் வரும் டிகெர் என்ற புலி மிகவும் அனிய விரும்பக்கூடிய விலங்காகும். மேன் புக்கர் பரிசை வென்ற "லைஃப் ஆப் பீ" என்ற புதினத்தில் கதாநாயகனான பை பட்டேல், பசுபிக் பெருங்கடலில் உடைந்த கப்பலில் சிக்கிக்கொண்ட தனி மனிதனாகச் சித்தரிக்கப்படுகிறான். அவனுக்கு அங்கு ஒரு நட்பு கிடைக்கிறது: அது ஒரு பெரிய வங்கப் புலி ஆகும். கால்வினும் ஹோப்ஸும் என்ற பிரபல சித்திரக் கதையில் கால்வின் என்ற பாத்திரத்துடன் அவனது திறமைசாலியான புலியும் இடம்பெறுகிறது அதன் பெயர் ஹோப்ஸ். பிரபலமான உணவான ஃப்ராஸ்டெட் ஃப்ளேக்ஸின் ("ஃப்ராஸ்டிஸ்" என்றும் குறிக்கப்படும்) அட்டைப் பெட்டியிலும் "டோனி த டைகர்" என்ற பெயர் கொண்ட புலி ஒன்று இடம் பெற்றிருந்தது.
புலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா[103] (வங்கப் புலி)[104] மலேசியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது.
அனிமல் ப்ளானெட் நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாவையாளர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும், டால்ஃபின்களுக்கு 13% வாக்கும், குதிரைகளுக்கு 10% வாக்கும், சிங்கங்களுக்கு 9% வாக்கும், பாம்புகளுக்கு 8% வாக்கும், அவற்றைத் தொடர்ந்து யானைகள், சிம்பான்ஸிகள், உராங்குட்டான்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆகியவையும் இடம்பிடித்தன.[105][106][107][108]
அனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் இவற்றைப் பட்டியலிட்டு மேலும் கூறியதாவது: "வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே".[105]
உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், இந்த முடிவுகள் அவருக்கு நம்பிக்கையளித்திருப்பதாகக் கூறினார். "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார்.[105]
புலி (Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி அமுர் ஆற்று வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மர்றும் சுமாத்திரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.
உலகின் மேற்குப்பகுதி உட்பட 1900 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான புலிகளின் பரவல் எல்லை